மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி - 2ம் தேதி நடக்கிறது
வேலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான காமராஜர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கவுள்ளதாக வேலூர் நாடார் சங்க செயலாளர் பாக்கியராஜ் மற்றும் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் நாடார் மகாஜன சங்கம் சார்பில் விருதுநகரில் கல்வித்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் அடுத்த மாதம் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான காமராஜர் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி வேலூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காட்பாடி, சித்தூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கும், 9,10 ஆகிய வகுப்புகளுக்கும், 11,12 ஆகிய வகுப்புகளுக்கும் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகிறது.
6,7,8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்விச்சுடரொளி காமராஜர் அல்லது உலகம் போற்றும் உத்தமர் காமராஜர் என்ற தலைப்பிலும், 9,10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலம் போற்றும் கர்மவீரர் அல்லது காமராஜர் பாதையில் நடைபயில்வோம் என்ற தலைப்பிலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜரின் வாழ்வும் வெற்றியும் அல்லது காமராஜரின் அரசியல் பணியும் ஆட்சிப்பணியும் என்ற தலைப்புகளில் பேசலாம் என வேலூர் நாடார் சங்க செயலாளர் பாக்கியராஜ் மற்றும் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.