ரேஷன் கடை கட்டிடத்திற்கு இடையூறு - பொதுமக்கள் கோரிக்கை
ரேஷன் கடை கட்டிடத்தை தனிநபர்கள் ஆக்ரமிப்பு செய்யும் நோக்கத்துடன் இடையூறு செய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்
Update: 2023-12-24 05:05 GMT
திருப்புவனம் தாலுகா, கழுகேர்கடை கிராமத்தில் இருபது ஆண்டுகளாக ரேஷன் கடை இல்லாததால் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மழைக்காலத்தில் கசிவு ஏற்பட்டு மழைநீர் கட்டிடத்தின் உள்பகுதியில் ஒழுகுவதால் அரிசி மூட்டைகள் மற்றும் ரேஷன் பொருள்கள் நனைந்து வீணாகி வருகிறது. இந்நிலையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் கடை கட்டித்தர கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் சேதமடைந்த மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை இடித்து விட்டு தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசிடம் நிர்வாக அனுமதி பெற்று அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது தனிநபர்கள் ஆக்ரமிப்பு செய்யும் நோக்கத்துடன் கட்டிடம் கட்டுவதற்கு இடையூறு செய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தங்கள் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.