தீபாவளி சீட்டு மோசடி வழக்கு - நிதிநிறுவன உரிமையாளர், மேலாளர் கைது

Update: 2023-11-12 08:41 GMT

பொருட்களை எடுத்து செல்லும் மக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரத்தைச் சுற்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில்ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களை குறிவைத்து பல நிறுவனங்கள் களம் இறங்கின. அப்படியொரு நிறுவனம்தான் ஏ.பி.ஆர் சிட்பண்ட் நிறுவனம். பல்லாயிரம் பேரிடம் தீபாவளி சீட்டுபிடித்தது. 399 ரூபாய் முதல் 5000 ஆயிரம் ரூபாய் வரையிலான விதவிதமான ரேட் கார்டு போட்டு மக்களிடம் சீட்டுபிடித்தனர். 12 மாதம் கட்டி முடித்த பின் தரப்படும் பொருட்கள் எனச் சொல்லியுள்ள அந்த பட்டியலில் தீபாவளிக்கு பட்டாசு பாக்ஸ், தங்கக் காசு,மளிகை பொருட்கள், சில்வர் பொருட்கள், துணி, ஸ்வீட் என நீள்கிறது. அவ்வளவு பொருட்களை குறிப்பிட்டிருந்த பட்டியலை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் மாதாமாதம் சீட்டுபணம் கட்டினர். சீட்டுபணம் வசூல் செய்ய ஊருக்கு ஊர் ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்குப் பல ஆபர்களை தந்து சீட்டுபிடிக்கச் செய்தனர். அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிறுவனங்களில் சீட்டுபணம் கட்டினர். கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு சரியாக பொருட்களை தந்த நிறுவனம், கடந்த ஆண்டு முதல் சொதப்ப துவங்கியது. பாதி பேருக்கு பொருட்கள் தருவது, மற்றவர்களுக்கு தராமல் விடுவது என தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம் தீபாவளி சீட்டுபிடித்து பொருட்கள் தராமல் ஏமாற்றிய நிறுவனங்கள் மீது மக்களும், ஏஜென்ட்களும் புகார்கள் தந்தனர். அதன்படி 5 நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் ஏ.பி.ஆர்நிறுவனத்திடம் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே பொருட்கள் வேண்டும் என நெருக்கடி தந்தனர். ஆனால் பொருட்கள் தரவில்லை. உரிமையாளரும் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிருப்தியான மக்கள் நவம்பர் 10 ஆம் தேதிகாலை 7 மணிக்கு சுமார் 300 பேர் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு குவிந்தனர். குடோனுக்குள் புகுந்த மக்கள் உள்ளிருந்த பொருட்களை சூறையாடினர். சோபா, பீரோ, டிவி, ஏசி, நாற்காலிகள், பேட்டரி, பைக்குகள் போன்றவற்றை தங்களது வண்டிகள் மற்றும் ஆட்டோக்களில் வைத்து எடுத்துச் சென்றனர். அதேபோல் அருகில் இருந்த அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பெரிய மளிகை கடையில் இருந்த மளிகை பொருட்களை மூட்டைமூட்டையாக தூக்கிச் சென்றனர். அதேபோல் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக பைபாஸ் சாலையில் உள்ள ஹோட்டல், செய்யாற்றைவென்றாளில் உள்ள குடோன், பாப்பந்தாங்கல் கிராமத்தில் இருந்த மளிகை பொருட்கள் வைத்திருந்த குடோன் போன்றவற்றில் புகுந்த கும்பல் உள்ளிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைஎடுத்துச் சென்றனர். தகவல் தெரிந்து வந்த போலீஸார் எச்சரிக்கை செய்ததும் மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பொருட்கள் கிடைக்காத ஒருதரப்பு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்தாப் வீட்டின் முன்பு முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன்பு செய்யார் அல்தாப் வெளியிட்ட வீடியோவில், நாங்கள் யாரையும் ஏமாற்றமாட்டோம். சில தடங்கல்கள் பணம் கட்டிய அனைவருக்கும் நவம்பர், டிசம்பரில் தீபாவளி சீட்டுபொருட்கள் தரப்படும். அது தந்து முடிந்ததும் பொங்கலுக்கு தரவேண்டிய பொருட்கள் தரப்படும் என அறிவித்தார். மற்றொரு வீடியோவில் முன்னாள் எம்.எல்.ஏ தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக செய்யார், வந்தவாசி, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் உட்பட அப்பகுதி அரசியல் பிரமுகர்கள், அடியாட்கள், கட்டப் பஞ்சாயத்து கும்பல்கள் கார்களில், வேன்களில் ஏஜென்ட்களோடு இந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு வந்து மிரட்டி பொருட்களை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. பொருள் கிடைக்காமல் ஏமாந்தவர்களே சூறையாடலில் ஈடுபட்டுள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்நிலையில் தீபாவளி சீட்டுகட்டியவர்களுக்கு பொருள் தரவில்லை என,விழுப்புரம் மாவட்டம் வானூர் அருவாப்பாக்கம் வசந்தா மேரி தந்த புகாரின் அடிப்படையில் நேற்று சித்தூரில் பதுங்கியிருந்த அல்தாப் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிறுவன மேலாளர் கமலக்கண்ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News