கச்சத் தீவுக்கு எதிராக செயல்பட்டது திமுக- முன்னாள் அமைச்சர்
கச்சத் தீவுக்கு எதிராக செயல்பட்டது திமுக, காங்கிரஸ் தான் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. இன்று நாகர்கோவில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலையொட்டி கச்சத்தீவு குறித்து தி.மு.க.வும், பிரதமர் மோடியும் பேசி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான். மீனவர்கள் இவ்வளவு அல்லல்படுவதற்கு காரணம் திமுக அரசு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க அ.தி.மு.க. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கச்சத்தீவை மீட்க 2008-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எதிர்மனு தாக்கல் செய்த மத்திய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமில்லை என்று கூறினார்கள். அதற்கு ஆதரவாக தி.மு.க. அரசும் எதிர்மனு தாக்கல் செய்தது.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதற்காக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானமும் கொண்டு வந்தார். மத்திய காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து பலமுறை கடிதங்களை எழுதி உள்ளார். பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்துள்ளார் .ஆனால் இப்பொழுது கச்சத்தீவு குறித்து தி.மு.க., காங்கிரஸ் அரசுகள் பேசி வருகிறது. அவர்களுக்கு இதுபற்றி பேச எந்த தகுதியும் இல்லை. கச்சத்தீவை மீட்க அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை ஆதாரத்துடன் பேச வேண்டும். அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. 2008-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 2013-ம் ஆண்டுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போதைய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் இது தொடர்பாக பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதினார். கச்சத்தீவை மீட்பது தொடர்பாக எந்த கட்சியாவது வழக்கு தொடர்ந்து உள்ளதா? நாங்கள் தான் கச்சத்தீவை மீட்போம் என்று மீனவர்களை ஏமாற்றக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆதாரம் இருந்தால் அந்த ஆதாரத்தை வெளியிட்டு பேச வேண்டும். எங்களிடம் அதற்கான முழு ஆதாரங்களும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேடியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.