பேராவூரணி அருகே திமுக மாவட்ட பிரதிநிதிக்கு அரிவாள் வெட்டு
பேராவூரணி அருகே முன் விரோதம் காரணமாக பேரூராட்சி கவுன்சிலரின் கணவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான அறிவுமணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திமுக உட்கட்சி பூசல், பெருமகளூர் பேரூராட்சி கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி சேர்மன் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் திலகம். இவரது கணவர் அறிவுமணி (வயது 55).இவர் திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி அறிவுமணி கிராமக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ராம்குமார் என்பவர் அறிவுமணியை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் அறிவுமணியின் தலையில் வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அறிவுமணி பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது பற்றி அறிவுமணி, தன்னை முன் விரோதம் காரணமாக பேரூராட்சி சேர்மன் சுந்தர தமிழ் கணவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஏழாவது வார்டு கவுன்சிலர் சேகர் ஆகியோர் தூண்டுதலின் பேரில், கவுன்சிலர் சேகரின் அக்கா மகன், ராம்குமார் தன்னை அரிவாளால் வெட்டியதாக பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் சேர்மன் கணவர் ஜெயபிரகாஷ் மற்றும் கவுன்சிலர் சேகர் மற்றும் ராம்குமார் ஆகிய மூவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மூவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆபத்தான நிலையில் அறிவுமணி தொடர்ந்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இது பற்றி அறிவுமணி கூறுகையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தனது உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தி.மு.க நிர்வாகிகளிடையே உட்கட்சி பூசல் காரணமாக, திமுக பேரூராட்சி தலைவரின் கணவரே, திமுக பேரூராட்சி உறுப்பினரின் கணவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பேராவூரணி பகுதி திமுகவினருடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.