28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை தொகுதியை கைப்பற்றிய திமுக!
கோவை மக்களவை தொகுதியில் 1லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகள் ஆகியன உள்ளது. கோவை மக்களவைத் தொகுதி 1952 ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 5 முறையும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும் திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும் அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர்,கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு,கோயம்புத்தூர் தெற்கு,சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 64.42 சதவீத வாக்குகள் பதிவாகியது.திமுக சார்பில் கணபதி ராஜ்குமார்,அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய வேட்பாளராக போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவுக்கு பின் இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது.காலை எட்டு மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு 10 மணி வரை நடைபெற்றது. 24 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 ஆயிரத்து வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்றனர்.கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான காந்தி குமார் பாடி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.