ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: கல்வி அமைச்சர் பெருமிதம்
பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றி வரும் நமது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது கல்வி அமைச்சர் பெருமிதமாக கூறியுள்ளார்.
திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது,
விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் 379 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசியதாவது, வடக்கிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் இயல்புநிலை திரும்ப மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் நிலையை எண்ணிக்கொண்டிருக்கும் இதே வேலையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் எடுத்த முடிவை நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றுகிறோம் என்ற மன நிறைவோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் குடும்ப உறுப்பினர்களை பிரிந்து பள்ளிக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை விட்டு மற்ற பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றும் மகத்தான பணியை மேற்கொண்டு வருபவர்கள் நமது ஆசிரியர்கள். ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை. படி, படி என்ற ஆசிரியர்களையும், அடி, அடி என்று சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களையும் நாங்கள் மறக்கமாட்டோம். நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது. இவ்வாறு மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. மார்வா காலிங்ஸ் என்ற அமெரிக்கா கல்வியாளர் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒரு புத்திசாலி குழந்தை அடைக்கப்பட்டுள்ளான் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் அடைக்கப்பட்டுள்ள புத்திசாலி குழந்தையை வளர்த்து சமுதாயத்தில் பெரிய ஆளாக மாற்றுவதில் ஆசிரியர்களுக்கு அளப்பறிய பங்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 115 தொகுதிகளை சார்ந்த அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டேன். அங்கு மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க ஆசிரியர் பெருமக்கள் பல்வேறு நடவடிக்கைகளை முழு ஈடுபட்டுடன் மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் நமது சமுதாயத்தின் பொக்கிஷம். கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துகடவு, ஒத்தக்கால் மண்டபத்தில் பார்வையற்ற ஆசிரியர் புதிய பரிமாணத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அதை Youtube -லும் பதிவேற்றம் செய்து வருகிறார். நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் அரசு பள்ளியில் அங்கு கணித மரம் உள்ளது. கணித ஆசிரியர் அங்குள்ள கணித மரத்தில் கணித பார்மூலாக்களை எழுதி தொங்கவிட்டுள்ளார்கள். மாணவர்கள் விளையாடும் பொழுது கூட மரத்தின் அருகில் வருகையில் அவர்களால் கணித பார்மூலாக்களை படிக்க முடியும் என்ற வகையில் இந்த சிறந்த முயற்சியை எடுத்துள்ளார்கள். இவ்வாறு மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை யாரும் மிஞ்ச இயலாது. சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர் பெருமக்களை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம், அதுபோல இந்த ஆண்டும் 55 ஆசிரிய பெருமக்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரைம் இண்ஸ்ட்டியுசன் எனப்படும் பள்ளியில் பயின்ற நமது அரசுப்பள்ளி மாணவர்கள் 274 மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்.ஐ.டி, ஐ.ஐ.டி, தேசிய சட்ட கல்லூரி உள்ளிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கடந்த வாரம் கேரளா மாநிலம், கண்ணூர் சென்றிருந்த போது நமது பிரைம் இண்ஸ்ட்டியுசனில் பயின்ற மாணவர் தற்போது அங்கு உயர்கல்வி பயின்று வருகிறார். அவருடன் கலந்துரையாடியபோது கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திலிருந்து தேர்வாகியுள்ளார் என்று தெரிந்துகொண்டேன். இந்த அளவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களினால் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய மாவட்டமே இல்லை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூதுவர்களாகவும் செயல்படவேண்டும். இன்றைய தினம் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2-ஆம் கட்டத்தில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது பங்கேற்றவர்களுக்கும் சான்று வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. வெற்றி பெற்றவர்களும், பங்கேற்றவர்களும் தொடர்ந்து அடுத்த ஆண்டும் கனவு ஆசிரியர் விருது பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெண் ஆசிரியர்கள் உடை உடுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை வரப்பெற்றது. அது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு ஏதுவான உடையினை அரசணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அணிந்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பொது தேர்வு தேதிகள் வெளியிட்ட பின்பு 38 மாவட்டங்களை சேர்ந்த 8,500 தலைமையாசிரியர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினேன். அப்போது அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் 115 சட்டமன்ற தொகுதிகளின் ஆய்வின் போது தெரிவிக்கப்பட்ட 100 கருத்துகள் குறித்து விவாதித்தோம். தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் வேண்டுகோள்விடுத்தேன். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்தாண்டு 1000 பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்தார். இந்தாண்டும் மேலும் 1000 பள்ளி வகுப்பறைகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. இன்று நமது இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள். இச்சிறப்பு மிக்க நன்னாளில் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அவரது பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்வன் திட்டத்தையும், சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது பல்வேறு பள்ளிக்கல்வித்துறை திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம். அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம் என மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி மற்றும் மருத்துவத்துறையை தனது இரு கண்களாக பாவித்து இமை காப்பது போல பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்வித்துறையில் நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மாணவர்களை வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தினையும் செயல்படுத்தி வருகிறார்கள். அறிவு பசியை போக்குவதற்கு முன் அவர்களது வயிற்று பசியை போக்கிட வேண்டுமென்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து அரசுப்பள்ளிகளிலும் செயல்படுத்தியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். கர்ம வீரர் காமராஜர் அவர்களை போன்று காலை உணவுத்திட்டத்தை கொண்டு வந்து பள்ளிக்கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். கல்வி என்பது போராடி பெற்ற சொத்து. எதை வேண்டுமென்றாலும் எடுக்கலாம். ஆனால் கல்வியை எடுக்க இயலாது. எவ்வாளவு இடையூறுகள் வந்தாலும் கல்வியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கை கணினிதிட்டம், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை, ஆசிரியர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையாக ரூ.50,000 வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது ஆசிரியர்களும் வெளிநாடு சுற்றுலா செல்லும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்கள். இன்று இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுடன் அன்பில் என்ற நிகழ்ச்சியில் மூலம் ஆசிரியர்களின் கருத்துகளை பெற்று அதை களைவதற்கான முயற்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆய்வுகளுக்கு எங்கு சென்றாலும் அங்குள்ள ஆசிரிய பெருமக்கள்,சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்கள். அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதை நிறைவேற்றும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். கல்வியில் சிறந்த நாமக்கல் மாவட்டத்தில் இவ்விழாவினை நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறைக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் திருமதி ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் திரு.மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி துறையினர் உடன் இருந்தனர்