குடி தண்ணீருக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!

கீழ்கோழிக்கரை கிராமத்தில் குடிதண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்கள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என மனு அளித்தனர்.

Update: 2024-05-13 15:15 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி, நஞ்சநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ்கோழிக்கரை கிராமத்தில் 40 குடும்பங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய கிராமம் என்பதால் மனித விலங்கு மோதல்கள் இங்கு அதிகமாக உள்ளது. ஆரம்ப காலங்களில் இங்கிருந்து வனப்பகுதியில் சென்று தண்ணீர் எடுத்தபோது வனவிலங்குகள் தாக்குதலால் அப்பகுதியினர் பாதிக்கப்பட்டனர். இதனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நஞ்சநாடு பஞ்சாயத்து சார்பில் கிராமத்தில் குடிதண்ணீருக்காக கிணறு அமைக்கப்பட்டு அந்த கிணறு மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீலகிரியில் இந்தாண்டு வரலாறு காணாத வறட்சி நிலவுவதால், பல்வேறு இடங்களிலும் குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கீழ்கோழிக்கரை கிராமத்திலும் கிணறு வறண்டு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகி உள்ளனர்.

ஆனால் இதுவரை அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கிராம மக்கள் இன்று குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஊட்டி ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- நஞ்சநாடு பஞ்சாயத்து சார்பில் 20 வருடங்களுக்கு முன்னர் கிணறு அமைக்கப்பட்டது. தற்போது கிணறு வற்றிவிட்டது, தண்ணீர் இல்லை. சோலைக்குள் ஏற்கனவே சென்ற 2 பேர் காட்டெருமை தாக்கி இறந்துள்ளனர். இதனால் சோலைக்குள் சென்று தண்ணீர் எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் நிலைமை பரவாயில்லாமல் உள்ளது. இதேநிலை அடுத்த மாதம் தொடர்ந்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் பாதிப்படைவார்கள். எனவே தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கிணறை ஆழப் படுத்த வேண்டும். மேலும் ஊரில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே பொதுமக்கள் மனு கொடுத்ததால், நஞ்சநாடு பஞ்சாயத்து சார்பில் லாரி மூலம் கீழ் கோழிக்கரை கிராமத்திற்கு தற்காலிக தீர்வாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News