சாத்தான்குளம்: ஓட்டுநர் வீட்டில் தீ விபத்து
சாத்தான்குளம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேபுதுக்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (35). அரசு பேருந்து ஓட்டுநர் . இவரது மனைவி ஸ்டெல்லா(32). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு புதுக்குளத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சக்திவேல், மனைவி மற்றும் குடும்பத்துடன் கோயில் விழாவுக்கு சென்றிருந்தார்.
ஒரு மகன் மட்டும் வீட்டில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மின் கசிவு காரணமாக வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓலை செட்டில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. அப்போது வீட்டில் இருந்த மகன், அதிர்ச்சி அடைந்து வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பினார்.
விபத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள், தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், பீரோ, கட்டில், டிவி. மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தகவல் அறிந்து புதுக்குளம் கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ், தலையாரி லட்சுமணன், சாத்தான்குளம் காவல் உதவ ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பாலமேனன், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் 25 கிலோ அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் அரசு சார்பில் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது கோயில் தர்மகர்த்தா பாண்டி மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர். சக்திவேல் குடும்பத்தினர் கோயிலுக்கு சென்றிருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.