மாடு முட்டி இறந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு - சிபிஎம் ஆர்ப்பாட்டம்  

தஞ்சாவூர் அருகே அரசின் கால்நடை பண்ணையில் மாடு முட்டி உயிரிழந்த கால்நடை பராமரிப்பு பணியாளரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை அவரது உடலை பெறப்போவதில்லை என அவரது குடும்பத்தினர், சக தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Update: 2024-06-21 07:11 GMT

தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் உயரின கால்நடை பெருக்குப் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் உயர்ரக  215 கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கால்நடைகளை பராமரிக்க தினக்கூலி பணியாளர்களாக 81 பேர் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், புதன்கிழமை மாலை ஒரத்தநாட்டை அடுத்த சேதுராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து மகன் கோவிந்தராஜ் ( 45) என்பவர் கால்நடைகளை பராமரித்துக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த கால்நடை ஒன்று அவரை நெஞ்சில் முட்டியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பிற பணியாளர்கள் வாகனத்தில் அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்நிலையில், வியாழக்கிழமை காலை உயரின கால்நடை பெருக்குப் பண்ணை முன்பு தினக் கூலி பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாடு முட்டி இழந்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்க வேண்டும்.  மேலும் பராமரிப்பு பணியாளர்களாக உள்ள மற்ற பணியாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காலை பணிக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கார்த்திகேயன்,  துணை இயக்குனர் ராஜியக்கொடி ஆகியோர் முறையிட்டுள்ளனர். அதற்கு  பணியாளர்களின் கோரிக்கையை துறையின் உயர் அதிகாரிகளிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.  உறவினர்கள் போராட்டம்  இந்நிலையில், மாடு முட்டி இறந்து போன கோவிந்தராஜ் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும். அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கால்நடை பெருக்குப் பண்ணை தொழிலாளர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உடற்கூறாய்வு அறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன்,  சி.ஜெயபால், என்.வி.கண்ணன்,  எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் ஆகியார் வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் விரைவில் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.  இதையேற்று உடலைப் பெற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அரசு தரப்பில் உறுதியளித்தபடி நிவாரணம் பெற்று தர தாமதமாகும் பட்சத்தில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News