தொடர் மழையால் குண்டுமல்லி விலை திடீர் உயர்வு

தொடர் மழையால் சேலம் பூ மார்க்கெட்டிற்கு குண்டுமல்லி வரத்து குறையத் துவங்கியதால், அதன் விலை அதிகரித்துள்ளது.

Update: 2024-05-18 06:15 GMT

தொடர் மழையால் சேலம் பூ மார்க்கெட்டிற்கு குண்டுமல்லி வரத்து குறையத் துவங்கியதால், அதன் விலை அதிகரித்துள்ளது. 

சேலம் கடைவீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் குண்டுமல்லி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பூக்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் குண்டுமல்லி விலை கடுமையாக சரிந்து ஒரு கிலோ ரூ.250 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால் வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு குண்டுமல்லி வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதனால் அதன் விலை திடீரென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் குண்டுமல்லியை குறைவாகவே வாங்கி சென்றனர். அதேபோல், ஒரு கிலோ முல்லை ரூ.280-க்கும், காக்கட்டான் ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.160-க்கும், நந்தியா வட்டம் ரூ.200-க்கும், சாமந்தி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சேலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் குண்டுமல்லி மட்டுமின்றி அனைத்து பூக்களின் விலையும் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News