புழுதி பறக்கும் ஆசூர் சாலை - அச்சத்தில் வாகன ஓட்டிகள்
புழுதி பறக்கும் ஆசூர் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Update: 2024-04-05 08:00 GMT
காஞ்சிபுரம் ஒன்றியம், ஆசூரில் இருந்து, இளையனார்வேலுார், நெல்வேலி செல்லும் மும்முனை சாலை சந்திப்பு உள்ளது. கல் குவாரிகளில் இருந்து இச்சாலை வழியாக சென்ற லாரிகளால், மும்முனை சாலை சந்திப்பில் சாலை சேதமடைந்து, மண் சாலையாக மாறி உள்ளது. கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது சாலையில் புழுதி பறக்கிறது. எதிரில் வரும் வாகனங்களை மறைக்கும் அளவிற்கு பனி மூட்டம்நிலவுவதைப்போல புழுதி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களில் துாசு விழுவதோடு, தொடர்ந்து இச்சாலையில் பயணிப்போருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், மும்முனை சாலை சந்திப்பு பகுதி என்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, புழுதி பறக்கும் ஆசூர் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.