மயிலாடுதுறை: இ-நாம் முறையில் நெல் கொள்முதல்

செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நேரடி கொள்முதல் செய்யப்பட்டுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-02-14 07:31 GMT

நெல் கொள்முதல் நிலையம் 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செம்பனார்கோயிலில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் சம்பா பருவநெல்லை அறுவடை செய்துள்ளனர். இதனை முன்னிட்டு விவசாயிகளின் நலன் கருதி கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில் விற்பனைகூட பொறுப்பாளர் சிலம்பரசன், முன்னிலையில் மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு, கொள்ளிடம் உதவி வேளாண் அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் செம்பனார்கோயில் அருகே மாத்தூர், பாகசாலை, பச்சபெருமாநல்லூர் போன்ற கிராமங்களில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.

இதில் சுமார் 600 குவிண்டால் ஏ.டீ.டி 46,38 ரக நெல் 800 மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2300-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,150-க்கும் சராசரியாக ரூ.2,200-க்கும், சீரக சம்பா ரக நெல் 60 குவிண்டால் 100 மூட்டைகள் ஒரு குவிண்டால் ரூ.3,333-க்கும், விலைபோனது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பருவநெல்லை அறுவடை செய்து, விற்பனை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் நெல்லை விற்பனை செய்ய கொள்ளிடம் உதவி வேளாண்மை அலுவலர் மகேஸ்வரன் வழிகாட்டுதலின்பேரில் தற்போது உரிய விலைக்கு நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனவே சுற்றுப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்களது விளைபொருட்களை விற்று பயன்பெற வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News