சேலத்தில் கோடை வெயிலின் தாக்கம் - பொதுமக்கள் அவதி !
பகலில் வெயிலில் செல்வதை பொதுமக்கள் முடிந்த வரை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். வெயிலுக்கு பயந்து சிலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் கொளுத்தும் வெயிலால் வாகன ஓட்டிகள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று வெயிலின் அளவு அதிகபட்சமாக 105.1 டிகிரி பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மதியம் 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சாலையில் நடந்து செல்லும் பெண்கள் குடைகளை பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். சேலம் மாநகரில் பல்வேறு தேவைகளுக்காக தங்களது மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர்கள், சாலையோர கடைகளில் பழச்சாறு, மோர், நுங்கு, பதநீர் போன்றவற்றை வாங்கி அருந்தி செல்வதை காணமுடிகிறது.
குறிப்பாக உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பதநீர், நுங்கு போன்றவற்றை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் அதன் விற்பனை சேலத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு லிட்டர் பதநீர் ரூ.80 முதல் ரூ.100-க்கும், ஒரு டம்ளர் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு வழக்கத்தைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பகலில் வெயிலில் செல்வதை பொதுமக்கள் முடிந்த வரை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.