அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு
தருமபுரியில் மக்களவை தேர்தலையொட்டி மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024- ன் ஒரு பகுதியாக மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்குக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மண்டல அலுவலர்கள், மண்டல அலுவலராக நியமிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடைமுறை முடியும் வரை தேர்தல் பணிகளுக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டல பகுதிக்கு பொறுப்பாவர்கள். மண்டல அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மண்டலத்திற்குப்பட்ட வாக்குச்சாவடிகளை தணிக்கை பதற்றமான வாக்குச்சாவடிகள் செய்து குறித்து அறிக்கையை உரிய படிவங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவுறுத்தப்பட்டது.
வாக்குச்சாவடிகளிலுள்ள அடிப்படை வசதிகள்(AMF) குறித்து ஆய்வு செய்து உரிய படிவத்தில் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளைப் பற்றியும் வாக்கு பதிவு மையங்களைப் பற்றியும், கடந்த கால தேர்தல் தொடர்பான விவரங்களையும் சேகரித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும், தேர்தலில் எவ்வித புகார்களும் ஏற்படாதவாறு மண்டல அலுவலர்களின் பணிகள் இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக எந்தவொரு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் சூழல் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், வாக்குப்பதிவு நாட்களுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகளையும், கடமைகளயும் முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும் எனவும், தேர்தலை எவ்வித குறைபாடுமின்றி நடத்துவதற்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அலுவலர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், அனைத்து வாக்குச்சாவடிகளைப் பற்றி முழுமையாக அறிந்து தேர்தலில் எவ்வித குறைபாடும் இன்றி செயல்பட வேண்டுமெனவும் எடுத்துரைத்தார். இப்பயிற்சி வகுப்பில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தேர்தல் தனி வட்டாட்சியர் அ.அசோக்குமார், தனி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.