தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படணும் - எல். முருகன்
தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிடும் எல். முருகன் ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் முடிந்து இன்று ஊட்டிக்கு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி மேட்டுப்பாளையத்திற்கு வந்து சென்ற பின்னால் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. தேநீர் விற்பவரின் மகனாக இங்கு வந்து சென்றது, வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. தேயிலைக்கு உரிய விலையை பெற்றுத் தருவோம். நீலகிரி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆ.ராசாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரசாரத்திற்கு ஆ.ராசா செல்லும்போது, கிராமத்திற்குள் வர வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வெளியே அனுப்புகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நீலகிரி தொகுதியை மேம்படுத்த எந்த ஆ.ராசா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சனாதானத்தை பற்றி பேச தி.மு.க., விற்கு எந்த அருகதையும் இல்லை. ஆ.ராசா கடவுள்களைப் பற்றி தவறாக பேசுகிறார். அவர் ஒரு பிரிவினைவாதி. இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் ஆன தேர்தல். இந்த தேர்தல் ஊழலுக்கு எதிரான தேர்தல். 2009ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிடும் ஆ. ராசா அவருடைய வாக்காளர் அடையாள அட்டையை கூட இதுவரை நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை.
சமூக நீதி பற்றி பேச ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோருக்கு தகுதி கிடையாது. தனித் தொகுதிகளில் போட்டியிட எந்த அருந்ததியினருக்கும் தி.மு.க., வாய்ப்பு தரவில்லை. நீலகிரி தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர். எனவே தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், சுந்தரமாகவும் ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க., சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட உள்ளது.
தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் என்னை சுற்றி வருகின்றனர். ஆனால் ஆ.ராசா செல்லும் வாகனத்தை அவர்கள் முறையாக சோதனை செய்வது கிடையாது. பிரதமர் மீது தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த தேர்தலில் 39 இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் பிரதமரால் வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய தலைவர் நட்டா வருவது உறுதியாகி விட்டது. ஊழல்வாதிகள் சிறையில் இருக்கின்றனர். பா.ஜ.க.,வை குறை சொல்வதற்கு சிறு காரணம் கூட இல்லை. அந்த அளவிற்கு பாரத பிரதமர் தூய்மையான அரசியலை 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். சுவரொட்டிகள் ஓட்டும் செயல்பாடுகள் மூலம் பொதுமக்களிடையே பா.ஜ.க.,வை வீழ்த்த முடியும் என்ற எண்ணம் எடுபடாது.