பண பயன்களை வழங்கக்கோரி மூடப்பட்ட பஞ்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் மூடப்பட்ட தனியார் பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கான வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பயன்களை வழங்கக்கோரி ஐஎன்டியூசி, விடுதலை சிறுத்தை கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், ராம்ஜிநகரில் ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை இயங்கி வந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். பஞ்சாலையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆலை மூடப்பட்டது. இதனை தொடர்ந்து வேறொரு நிறுவனம் அந்த பஞ்சாலையை ஏலத்திற்கு எடுத்து நடத்தியது. அப்போது ஏற்கெனவே பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால் நீக்கப்பட்ட அந்த நிறுவனம் பணியாற்றிய ஊழியர்களுக்கான வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்களை 15 வருடத்திற்கு மேலாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டும் தீர்வு எட்டப்படவில்லை. தொகையை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் கலைத்தல் அதிகாரி மற்றும் அரசு வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலைகளை இழந்து வறுமையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்க மாவட்ட ஆட்சித் தலைமையில் உடனடியாக முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராம்ஜீநகரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.