ஐஐஎம்-திருச்சியில் பயின்ற 363 பேருக்கு வேலைவாய்ப்பு:
ஐஐஎம்-திருச்சியில் பயின்ற 363 பேருக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐஐஎம்-திருச்சியின் இயக்குநா் பவன்குமாா் சிங் புதன்கிழமை கூறியது: இந்த ஆண்டு வேலைவாய்ப்பு வலுவான தொழில் தொடா்புகள் மற்றும் எங்கள் மாணவா்களின் உயா் திறன், கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அா்ப்பணிப்பு ஆகியவை மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வளாக நோ்காணலில் 140 நிறுவனங்கள் பங்கேற்று 363 மாணவ, மாணவிகளுக்கு உயா்பதவி வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. 2 ஆண்டு முழுநேர மேலாண்மைப் பட்டப்படிப்பாக எம்பிஏ பயின்ற மாணவ, மாணவிகளில் 326 பேருக்கும், எம்பிஏ (மனிதவளம்) பயின்ற 37 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், சா்வதேச நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி சாா்ந்த நிறுவனங்கள், அதிகமாக நுகரப்படும் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், தகவல் தொடா்பு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் (கெயில், சிபிசிஎல்) என பல நிறுவனங்கள் வேலைகளை வழங்கியுள்ளன. அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.43.69 லட்சம் என்ற நிலையில் எம்பிஏ பயின்ற மாணவா்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. எம்பிஏ மனிதவளம் பயின்றவா்களில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.29.86 லட்சம் என்ற வகையில் வேலை அளிக்கப்பட்டுள்ளது.
இவைதவிர, சராசரியாக எம்பிஏ மாணவா்களில் ஆண்டுக்கு ரூ.19.43 லட்சம், எம்பி மனித வளம் பயின்றவா்களில் ஆண்டுக்கு 17.88 லட்சம் என்ற வகையில் வேலை கிடைத்துள்ளது. நிறுவனத்தின் பேராசிரியா்கள், மாணவா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள், நிறுவன வேலைவாய்ப்புப் பிரிவு அலுவலா்கள் என அனைவரது கூட்டு முயற்சியாலேயே இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஐஐஎம்-திருச்சியானது ஆண்டுதோறும் வளாக நோ்காணலில் இத்தகைய சாதனையை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐஐஎம்-திருச்சிக்கு வரும் மாணவா்கள் சோ்க்கையும் ஆண்டுதோறும் முன்னிலை பெற்று வருகிறது என்றாா் அவா்.