தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - ஈபிஸ் பேச்சு

சேலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.;

Update: 2024-02-26 01:57 GMT

பொதுக்கூட்டம்

சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி, சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு தாதகாப்பட்டி கேட் பகுதியில் நடந்தது. மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

Advertisement

நல உதவிகள் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே. செல்வராஜ், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 5 ஆயிரத்து 176 பேருக்கு நல உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முடியவில்லை. தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அ.தி.மு.க. தான் உண்மையான ஜனநாயக கட்சி. சேலம் மாவட்டம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை. அதை பிடிக்க வேண்டும் என்ற பகல் கனவுடன் இங்கு தி.மு.க. இளைரஞணி மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்த தீர்மானமாவது நிறைவேற்றப்பட்டதா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

அதிக கடன் தி.மு.க., அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மிக்ஜம் புயல், கனமழை பாதிப்புக்கு உரிய நிவாரணம் கேட்டு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் தமிழகத்திற்கு உரிய நிதி கிடைத்திருக்கும். அதை செய்திருந்தால் நாங்களே பாராட்டி இருப்போம். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் 3 லட்சத்து 58 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. இந்தியாவில் தமிழகம் தான் அதிக கடன் வாங்கி முதலிடம் பிடித்துள்ளது. தி.மு.க. கட்சியில் உள்ளவர்களே போதை பொருட்களை விற்கின்றனர்.

இதனால்தான் போதை பொருட்கள் விற்பனையை நிறுத்த முடியவில்லை. இதேநிலை நீடித்தால் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி விடும். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும் நாங்கள் குரல் கொடுப்போம். மக்கள் ஆதரவுடன் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News