பூந்தமல்லி நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல்
பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பல்வேறு காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தாமஸ் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ரஞ்சித் குமார், பொருளாளர் ஜெகதீஷ், நூலகர் கோபி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பொங்கல் விழாவையொட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் வாழை, கரும்பு, தென்னை ஓலை, மாவிலை தோரணம் கட்டி கிராமியத் திருவிழா போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து சூரியனுக்கும், இயற்கைக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக புதுப் பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி மகிழ்ச்சி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும் சிவில் நீதிபதிகளுக்கான முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்களை நீதிபதிகள் வாழ்த்தி பேசினர்.
இதையடுத்து தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலம்பம், தப்பாட்டம், தீப்பந்தம் ஆடல் மற்றும் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டார். மேலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.