திருநகர்: முன்னாள் ஊராட்சி தலைவர் பலியான சோகம்
திருநகர் சாலையில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த லாரி மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை மாவட்டம் தென்பழஞ்சி அருகே பெரிய சாக்கிலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விருமாண்டி தேவர் என்பவரது மகன் மூக்கையா (65) இவர் இன்று மதியம் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பல சரக்கு மற்றும் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் மதியம் ஒரு மணி அளவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருநகர் தேவி கலைவாணி தியேட்டர் அருகே தனது டூவீலரில் மூக்கையா சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பழங்காநத்தத்திலிருந்து தோப்பூர் வரை உள்ள சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 40 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை விரிவாக்க பணியானது கடந்த 6 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளமும் மற்றும் சாலை பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தனது டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மூக்கையா பின்னால் டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த மூக்கையாவின் டூவீலர் சாலையின் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் பொழுது நிலைதடுமாறி பின்னால் வந்த டாரஸ் லாரியின் பக்கவாட்டில் டூ வீலர் ஹேண்ட் பார் சிக்கியதில் நிலை தடுமாறி டாரஸ் லாரியின் பின் விழுந்துள்ளார் இதில் டாரஸ் லாரியின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே முக்கையா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து குற்றப்புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் சாலையின் ஒரு புறம் தார் சாலை அமைத்தும் மற்றொருபுறம் சாலை போடுவதற்காக ஜல்லி கற்களை கொட்டி வைப்பதாலே அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.