தனியார் பள்ளி ஆசிரியரிடம் செல்போன், பணம் பறிப்பு
தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையைச் சேர்ந்தவர் அப்பாஸ் (51) இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து தஞ்சாவூருக்கு ரயிலில் வந்து இறங்கினார்.
அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்காக இரவில் மேரிஸ் கார்னர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் மோட்டார் சைக்கிள் அங்கு வந்து இறங்கி, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினர். அப்பாஸ் கொடுக்க மறுக்கவே, அனைவரும் சேர்ந்து அப்பாஸை தாக்கி சட்டைப் பையில் இருந்த ரூபாய் 6,500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து பணத்தை பறிகொடுத்த அப்பாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.