கள்ளக்காதல் விவகாரம் - ஆட்டு வியாபாரி ஓட ஓட விரட்டி கொலை
காரியாபட்டி அருகே மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்த ஆட்டு வியாபாரியை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன்(40). ஆட்டு வியாபாரியான ராமநாதனுக்கும், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(45) என்பவரது மனைவி வைரஜோதிக்கும் இடையே தவறான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் ராமச்சந்திரனுக்கு தெரிய வரவே ராமச்சந்திரன் தனது மனைவி வைரஜோதியை சத்தம் போட்டுள்ளார்.
எனினும் அந்த தவறான பழக்கவழக்கம் தொடர்ந்து ஓராண்டாக பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ராமச்சந்திரனும் அவரது மகன் வீராவும்(27) சேர்ந்து திருமால் கிராமத்திற்கு சென்று ஆட்டு வியாபாரி ராமநாதனையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றையதினம் (13.05.24) இரவு ராமநாதன் காரியாபட்டியில் இருந்து எஸ்.கல்லுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரைப் பின் தொடர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீரா இருவரும் சேர்ந்து அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்து தாக்கினர்.
அப்பொழுது ராமநாதன் புளியங்குளம் கிராமத்திற்குள் தப்பி ஓடத் தொடங்கிய நிலையில், அவரை ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீரா ஆகிய இருவரும் விரட்டி விரட்டி ராமநாதனை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காரியாபட்டி போலீசார் ராமநாதன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமநாதனை கொலை செய்ததாக ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீரா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டு வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.