பிரபல பேக்கரிக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிஸ்கட் பாக்கெட்டினை பூச்சியுடன் பொட்டலமிட்ட பேக்கரி உட்பட உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிய 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சுகாதாரத்துறையின் செயலாளர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தெய்வச்செயல்புரத்தில் உள்ள பேக்கரியில் பூச்சியுடன் வைன் பிஸ்கட் பொட்டலமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாகக் கிடைக்கப்பெற்ற புகாரின் படி, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ச.மாரியப்பன் உத்திரவின் பேரில், ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்(பொ) காளிமுத்து அவர்கள் மேற்படி பேக்கரியை ஆய்வு செய்தார்.
அவ்வாய்வின்போது, அந்தப் பேக்கரியில் சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டதுடன், செல்லத் தக்க உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும் கண்டறியப்பட்டது. எனவே, அந்தப் பேக்கரியின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும், இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு, முன்னேற்ற அறிவிப்பு வழங்கவும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் வணிகம் புரிந்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களான, சிவக்குமார், சக்திமுருகன், ஜோதிபாஸூ மற்றும் காளிமுத்து ஆகியோர் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, கடந்த இரண்டு மாதங்களில் பின்வரும் 10 உணவு வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்/பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் மேற்கொண்டது அறியப்பட்டு, மூடப்பட்டது. மேலும், இரண்டு கடைகள் தமது விற்றுக்கொள்முதலைக் குறைத்துக் காண்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்திற்குப் பதிலாக, பதிவுச் சான்றிதழ் பெற்ற இரண்டு உணவகங்களும் மூடப்பட்டன. அதன் பின்னர், அவ்வணிகர்கள் இணையதளம் மூலமாக உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து, அதனைப் பெற்ற பின்னர் கடைகள் மீண்டும் திறந்துவிடப்பட்டன. உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவு வணிகம் புரிந்த குற்றத்திற்காகவும், தவறான தகவல் வழங்கி, பதிவுச் சான்றிதழ் பெற்ற குற்றத்திற்காகவும், அவ்வணிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.