வேட்புமனு தாக்கல் செய்ய மண்பானையுடன் வந்த விவசாயி

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய மண்பானையுடன் வந்த விவசாயி வங்கி கணக்கு தொடங்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

Update: 2024-03-27 17:29 GMT

வேட்புமனு தாக்கல்

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை தஞ்சை மாவட்டம் அருமலைக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி தங்கராசு மண்பானையில் டெபாசிட் தொகையை வைத்து கொண்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை நுழைவு வாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி மண்பானையுடன் செல்லக்கூடாது என கூறினர். இதையடுத்து மண்பானையை தன்னுடன் வந்த மற்றொரு விவசாயியிடம் கொடுத்து விட்டு தங்கராசு மட்டும் சென்றார். முதல்தளத்தில் உள்ள வேட்புமனு உதவி மையத்திற்கு சென்ற அவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேவையானவை இருக்கிறதா? என சரிபார்த்தார். அப்போது வங்கி கணக்கு புதிதாக தொடங்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் பார்த்து வங்கி கணக்கு தொடங்கிவிட்டு அந்த கணக்கு புத்தகத்துடன் வர வேண்டும் என கூறினர். மேலும் பிற்பகல் 3 மணியை கடந்துவிட்டதால் நாளைக்கு (புதன்கிழமை) வந்து வேட்புமனு தாக்கல் செய்யும்படி கூறியதால் தங்கராசு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். மண்பானையுடன் வந்தது ஏன்? என தங்கராசுவிடம் கேட்டபோது, மண்பானை நமது பாரம்பரியம் சார்ந்தது. அதனால் மண்பானையில் டெபாசிட் தொகையை வைத்து கொண்டு வந்தேன். மேலும் தேர்தலில் மண்பானை சின்னம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க இருக்கிறேன் என்றார்.
Tags:    

Similar News