கிணற்றில் கிரேன் அறுந்து விழுந்து விவசாயி பலி
பாலக்கோடு அருகே கிணறு தூர் வாரும் வேலை செய்யும் போது கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலங்காலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் விவசாயி செய்து வருகிறார்.இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள 50 அடி ஆழ பழைய கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதற்காக செல்வம் மற்றும் தொழிலாளர்கள் கிரேன் மூலம் தூர்வாரும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றின் மேலே பொருத்தப்பட்டு இருந்த கிரேன் பாரம் தாங்காமல் கிணற்றில் விழுந்தது.
இதில், கிணற்றுக்குள் இருந்த செல்வம், குமார் முதலிட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிரேன் உரிமையாளர் சின்ன சாமி ஆகிய 3 பேரும் கிரேனுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கள் சம்பவ இடத்திற்கு சென்று கிரேனுக்கு அடியில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர்.
இதில் செல்வம் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். சின்னசாமி படுகாயமும், குமார் லேசான காய மும் அடைந்தனர். தொடர்ந்து சின்னசாமி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. பின்னர் செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.