மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி
விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்துடன் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம்,ஒடுகத்தூரை அடுத்த குருராஜபாளையம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 70). இவர் நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மராட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், கிருஷ்ணன் சென்ற சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் பிணத்தை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் இதுவரையில் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு இந்தப்பகுதியில் இன்றுக்குள் வேகத்தடை அமைத்துக்கொடுக்க கேட்டுக்கொண்டார். அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.