பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும்-எஸ்.பி.வேலுமணி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19ம் தேதி மக்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து இருக்கின்றனர் எனவும் இதற்கு சிபிஐ விசாரணை நடத்த கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பதாக தெரிவித்தார். அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தெரிவித்த அவர்; கள்ளகுறிச்சி கருணாபுரம் பகுதியில் முதன் முதலாக நேரடியாக சென்று ஆறுதல் கூறி மக்களை சந்தித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என குரல் எழுப்பி இருக்கிறோம் என கூறியவர் நியாயமாக நடந்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத காரணத்தால் ஊடகங்கள் மூலம் வெளியே சொன்னோம் எனவும்,தமிழகம் முழுவதும் கள்ளக்குறிச்சி மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது இதில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் பல பிரச்சனைகள் வந்த போது போது சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது என தெரிவித்த அவர் எங்களது சட்டமன்ற உறுப்பினர் 2023ல் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போதே இந்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வில்லை அப்போதே நடவடிக்கைகள் எடுத்து இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம் எனவும் தெரிவித்தார். இனியாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.