விளைபொருட்களுக்கு ஆதாரவிலை கேட்டு விவசாயிகள் கோரிக்கை முழக்க போராட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விளைபொருட்களுக்கு ஆதார விலை கேட்டு விவசாயிகள் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார் பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சகாபுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
விவசாய விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை மற்றும் உத்தரவாத அரசு கொள்முதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அரியானா போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயி கரன்சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், மிக்ஜம் புயல் மற்றும் தீவிர மழைப்பொழிவு பாதிப்பு நிவாரண நிதியாக தமிழக அரசு கோரிய ரூ.37 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தென்பெண்ணையாற்று தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.