பால் கேன்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
வேப்பந்தட்டை அருகே பூம்புகார் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக கூறி, பால் கேன்களுடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள பூம்புகார் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் அதே ஊரில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் கொடுத்து வருகின்றனர். பால் கொள்முதல் செய்யும் , கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலர்கள் முறைகேடு செய்து வருவதாகவும் பால் உற்பத்தியாளர்களுக்கு 15 நாட்களில் பணப்பட்டு வாடா செய்யாமலும், ஊக்க தொகையை வழங்காமலும் மாதக் கணக்கில் காலம் தாழ்த்துவதாகவும், அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலையை வழங்காமல் குறைவாக வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஜூன் 24ஆம் தேதி பால் உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலை கூட்டுறவு சங்கத்திற்கு வழங்காமல், கேன்களில் பால்களை நிரப்பியவாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த, துறை சார்ந்த அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்றும் உடனடியாக கூட்டம் நடத்தி உற்பத்தியாளர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.