கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பெரியார் கருத்தை மேற்கோள் காட்டி அவரது புகைப்படத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-28 15:09 GMT

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் கள் இறக்கி விற்பனை செய்வதற்கு அனுமதி கேட்டு கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள் பானை மற்றும் கடமையை செய்யுங்கள் என்ற பெரியாரின் புகைப்படம் பொறித்த புத்தகத்துடன் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அரசேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள் இறக்கி தோட்டங்களில் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் இருப்பதால் அவற்றை தடை செய்ய முடியுமா? அதுபோல கள்ளில் கலப்படம் செய்பவர்கள் மீது அரசு குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுக்கலாம்.குறைந்தபட்சம் ஆவின் நிறுவனம் மூலம் அரசு கடைகளை நடத்துவதைப் போல கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கள் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்தால் கலப்படம் நடப்பது தடுக்கப்படும் என தெரிவித்தார். 

Tags:    

Similar News