மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்

புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-02-16 03:36 GMT

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கிச் சென்று விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோதப் போக்கைக் கண்டித்தும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், திருச்சியில்  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காவிரி ரயில் மேம்பாலத்தில் பிற்பகல் 12 மணிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடினா்.

கைகளில் சங்கத்தின் பச்சை வண்ணக் கொடிகளை ஏந்தி இருப்புப் பாதையில் அமா்ந்து கோஷங்கள் எழுப்பினா். இதனையடுத்து கைது செய்யப்பட்ட விவசாயிகள் மாலை விடுவிக்கப்பட்டனர். மீண்டும் இதனைத் தொடர்ந்து இரவு ரயில்வே ஜங்ஷனில் காத்திருந்த தஞ்சாவூர் செல்லும் பயணிகள் ரயிலை மறித்த அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் மாநகர காவல்துறையினர் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனிக்கவில்லை.

சுமாா் 1 மணிநேரத்துக்கும் மேலாக ரயில்வே தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் அய்யாக்கண்ணு கூறியது: தில்லி நோக்கிச் சென்றுள்ள விவசாயிகள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனரோ, அதே வகையிலான போராட்டங்களை திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மாா்ச் மாதம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியிலிருந்து தில்லி செல்லவும் முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

Tags:    

Similar News