கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்காமல் உத்திரமேரூரில் விவசாயிகள் அவதி

கரும்பு வெட்ட ஆள் பற்றாக்குறை காரணத்தால், 1,000 கிலோ கரும்பு வெட்ட 1,350 ரூபாய் கூலியாக இருந்து வந்த நிலையில், தற்போது 1,850 ரூபாய்க்கு கூலி உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-06 08:09 GMT

கரும்பு விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில் சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, மாம்பாக்கம், பினாயூர், அரும்புலியூர், காவியதண்டலம், திருவானைக்கோவில், விச்சூர், தண்டரை, திருப்புலிவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் உற்பத்தி செய்கின்ற கரும்புகளை, மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவைக்கு அனுப்புகின்றனர். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் அரவை செய்யப்படும் மொத்த கரும்பில், 30 சதவீதம், உத்திரமேரூர் வட்டார விவசாயிகள் சாகுபடி செய்யும் கரும்புகளாக உள்ளன.

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது. இதையடுத்து, உத்திரமேரூர் வட்டாரத்தில் கடந்த ஆண்டு சாகுபடி செய்த கரும்புகளை, விவசாயிகள் தீவிரமாக அறுவடை செய்ய துவங்கினர். எனினும், கரும்பு வெட்ட போதுமான ஆட்கள் கிடைக்காததால், இப்பகுதி கரும்பு விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலர் தனபால் கூறியதாவது, சாத்தணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்காமல் அறுவடையில் தாமதம் ஏற்படுகிறது. ஆலை நிர்வாகம் மூலம் வெட்டுக்கான உத்தரவு கிடைத்தும் கரும்பு அரவை பணி துவங்கப்படாத நிலை உள்ளது. கரும்பு வெட்ட ஆள் பற்றாக்குறை காரணத்தால், 1,000 கிலோ கரும்பு வெட்ட 1,350 ரூபாய் கூலியாக இருந்து வந்த நிலையில், தற்போது 1,850 ரூபாய்க்கு கூலி உயர்ந்துள்ளது. கரும்பு அறுவடை செய்ய ஆலை நிர்வாகம் சார்பில் அறுவடை இயந்திரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News