பதினெட்டாம் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்
Update: 2023-12-12 02:05 GMT
முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தேனி மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் பிடிஆர் மற்றும் பதினெட்டாம் ஆகிய 3 கால்வாய்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் போதியளவு நீரிருப்பு இருந்தும் டிசம்பர் இரண்டாவது வாரம் துவங்கியும் தற்போது வரை தண்ணீர் திறக்காமல் உள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தேனியில் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி பங்களாமேடு பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்க பங்களாமேடு பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகள் சிறிது தூரத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.