தனியார் தோட்டத்தில் தீ விபத்து
திக்குறிச்சியில் தனியார் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அணைத்தனர்
Update: 2024-02-27 08:37 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தோட்டங்களில் மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து காணப்படுகிறது.மேலும் காற்றின் வேகமும் அதிகமாக காணப்படுகிறது.இந்த நிலையில் மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.வெயிலின் தாக்கமும் காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக தோட்டம் முழுவதும் பற்றி எரிய துவங்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதனால் தோட்டத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.