வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா
வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
பரமத்தி வேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா மற்றும் பெண்கள் பூ வாரிப்போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு பூச்சாசாட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. விழாவை தொடர்ந்து 24- ஆம் தேதி இரவு புஷ்ப வியாபாரி சங்கம் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
25- ஆம் தேதி இரவு அம்மன் யானை வாகன புறப்பாடும். 26-ஆம் தேதி மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27- ஆம் தேதி மற்றும் 28-ஆம் தேதி இரவு அம்மன் அன்னவாகனம் மற்றும் சர்ப வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும்,
29-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை தீமிதி விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் ஆண்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீமிதித்தும் பெண்கள் பூ வாரி போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் பரமத்திவேலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளுனர்.