தொழில்முறை பங்களிப்பு கூட்டமைப்பின் முதல் மாநாடு
திருப்பூரில் தொழில்முறை பங்களிப்பு கூட்டமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது.
ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் , பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் , தொழிற்சங்கங்கள் , அரசு சாரா அமைப்புகள் , அரசு பிரதிநிதிகள் அடங்கிய திருப்பூர் தொழில்முறை பங்களிப்பு கூட்டமைப்பின் முதல் மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் தொழிற்சங்கங்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் தொழிலாளர்கள் நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். ஏஐடியுசி பனியன் ஃபேக்டரி லேபர் யூனியன் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது ,
பின்னலாடை நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் வருகை குறைவதும் , போதுமானதாக இல்லாமல் இருப்பதும் வருவாய் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அமைப்புசாரா தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 முதல் 900 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிக குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. அதனை அதிகப்படுத்தி வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக வழங்க வேண்டும். எந்தெந்த நிறுவனங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்துகிறார்களோ , அவர்கள் அந்த தொழிலாளர்களை பற்றிய முழு விவரங்களை திரட்டி காவல்துறை , வருவாய் துறை மற்றும் தொழிலாளர்கள் நலத் துறை என மூன்று துறைகளுக்கும் முறையாக கொடுக்கப்பட வேண்டும்.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு கலாச்சார விழாக்கள் மற்றும் சுதந்திர தினம் , குடியரசு தினம் , தொழிலாளர்கள் தினம் போன்ற நாட்களில் சாத்தியப்பட்ட வகையில் விழாவாகக் கொண்டாட வேண்டும். 100 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். 1948 ல் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் வாழ்விடம் , கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற திட்டமிட வேண்டும் என அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.