மீனவரின் லோடு ஆட்டோவில், அரிசி கடத்தல் - எஸ். பி -யிடம் புகார்
Update: 2023-12-11 18:30 GMT
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை சேர்ந்தவர் ஆனந்த். மீன் வியாபாரம் செய்து வரும் இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். மீன் லோடு எடுத்து வரும் இவர், தனது தேவைக்கு போக மற்ற நேரங்களில் அந்த லோடு ஆட்டோவை வாடகைக்கு கொடுத்து வந்தார். இரு தினங்களுக்கு முன் தனது லோடு ஆட்டோவை லாயம் என்னும் ஊரைச் சேர்ந்த திமுக பிரமுகர், சாம்ராஜ் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். சாம்ராஜ் லோடு ஆட்டோவை ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அரிசியுடன் ஆட்டோவை தூத்துக்குடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்த உடன், ஆனந்த் அவசரமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, தனது ஆட்டோவை தவறாக பயன்படுத்தி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பிறகு சாம்ராஜ் லோடு ஆட்டோவை ஆனந்துக்கு திரும்ப வழங்காமல், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் ஆளும் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து இன்று ஆனந்த் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.