காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகரிப்பால் மீனவர்கள் கவலை

ஆகாயத்தாமரை செடிகள் அதிகரிப்பால் காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2024-01-22 11:47 GMT

ஆகாயத்தாமரை செடிகள் அதிகரிப்பால் காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆறு உள்ளது .மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் போதெல்லாம் அளவுக்கு அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் காவிரி ஆற்றில் மிதந்து வந்து, பள்ளிபாளையம் பழைய பாலத்தில் நின்று விடுகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் செடிகள் அதிகமாக தேங்குவதும், உள்ளூர் பரிசில் ஒட்டிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் அதனை அகற்றுவதும் தொடர்கதையாக இருந்து வரும்  நிலையில், தற்போது காவிரி ஆற்று பழைய பாலம் முழுவதும் சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆகாயத்தாமரை செடிகள் காவிரி ஆற்று நீரை சூழ்ந்து கொண்டு உள்ளதால், தினந்தோறும் பரிசலில் சென்று மீன் பிடிக்கும் உள்ளூர் பரிசல் ஒட்டிகள் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இது குறித்து பரிசல் ஓட்டி முருகன் என்பவர் கூறும் பொழுது, ஆகாயத்தாமரை செடிகள் ஆற்று நீரை முழுவதுமாக மூடி இருப்பதால், மீன்கள் மிகுந்த ஆழத்திற்கு சென்று விடுகிறது. மேலும் இதனால் எங்களுக்கு மீன்கள் சரிவர கிடைப்பதில்லை. மேலும் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்துள்ள பகுதியில் துடுப்புகளை பயன்படுத்தி செல்ல முடியாத நிலை உள்ளதால் கணிசமான அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில், தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளால், ஆற்றில் குளிக்கும் பொது மக்களுக்கு தோல் அலர்ஜி,கண் எரிச்சல், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுகிறது.  உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் இணைந்து காவிரி ஆற்றை சுற்றியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது..

Tags:    

Similar News