குமரியில் மீன்பிடிக்க தயாராகும் மீனவர்கள்
குமரியில் மீன்பிடி தடைகாலம் முடிவடைய ஒரு வாரம் உள்ள நிலையில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டது. இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இந்த மீன்பிடி தடைகாலம் முடி வடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் விசைப் படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர்.
மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைத்து வந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் இறக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். 2 மாதங்களுக்கு பிறகு வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.