மீன் பிடி திருவிழா; அள்ளிச்சென்ற பொதுமக்கள்
சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான மீன்களை அள்ளிச்சென்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மணக்குடிகண்மாய் உள்ளது. கோடைகாலம் துவங்கி வெயில் வாட்டி வதைக்கும் நிலயில் கண்மாயில் தண்ணீர் வேகமாக வற்ற துவங்கியது. உடனே ஊர் பெரியவர்கள் பாரம்பரியமாக இலவசமாக மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து உள்ளூர் ,வெளியூர் மக்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
தொடர்ந்து அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீன்பிடியாளர்கள், ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சாரை சாரையாக வரத் துவங்கி கண்மாயை சுற்றி காத்திருந்தனர். ஊர் பெரியவர்கள் மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த மக்கள் மீன்பிடிக்க கண்மாய்க்குள் இறங்கி கொசுவலை, ஊத்தா,கச்சா, பரி,அரிகூடை உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க துவங்கினர். இதில் ஜிலேபி, விரால், கெண்டை உள்ளிட்ட மீன்களும், கட்லா , சிசி, போன்ற மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.