மீன்பிடித் தடைக்காலம் - படகுகளை மராமத்து செய்யும் விசைப்படகு மீனவர்கள்
தஞ்சாவூர் மாவட்டக் கடல் பகுதியில், மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படகுகளை மராமத்து செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக் காலம் அமலுக்கு வந்தது. இந்த காலக்கட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகில் சென்று மீன் பிடிக்க ஒன்றிய, மாநில அரசுகளால் தடை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகப்பகுதிகளில் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள் மராமத்துப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனவர்களின் விசைப்படகுகள் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. தடைக்காலம் காரணமாக விசைப்படகுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஐஸ் கம்பெனி தொழிலாளர்கள், சிறிய மற்றும் தலைச்சுமை மீன் வியாபாரிகள், உணவக, தேநீர் கடை வியாபாரிகள், சரக்கு வாகன ஓட்டிகள், சுமைத்தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
தடைகாலம் முடியும் வரை விலை உயர்ந்த மீன்களான நெய் மீன், வஞ்சிரம், பாறை, நண்டு, இறால் போன்ற தரம் வாய்ந்த கடல் உணவுப் பொருட்கள் கிடைக்காது. நாட்டுப்படகு, கட்டுமரம், தோணி மூலம் குறைந்த தூர கடல் பரப்பில் மீன்பிடிக்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் என்பதால் நெத்திலி, சாளை, சிறிய வகை நண்டு, இறால் போன்றவை மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வரும். இதனால், மீன்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இந்த தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை படகு கட்டும் தளத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி, மராமத்து பணிகள், இயந்திரங்கள் பழுது நீக்குதல், படகுகளுக்கு வர்ணம் பூசும் பணி, வலைகள் பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதியில் 147 விசைப்படகுகள் உள்ளன. இந்த தடைக்காலத்தில் இப்பகுதியில் உள்ள குறைந்தளவு விசைப்படகுகளில் மராமத்து பார்க்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மரவேலை, இயந்திர வேலை, வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக பழுது நீக்கும் பணி ஓரளவே நடந்து வருகிறது. மேலும் தளவாடப் பொருட்கள் விலை உயர்வாலும், வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கூடுதல் கூலி கொடுக்க வேண்டி இருப்பதாலும் மராமத்து பணிகளுக்கான செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், படகுகளை பழுதுநீக்கம் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை செலவிடப்படுவதாக விசைப்படகு உரிமையாளர் தாஜுதீன் தெரிவித்தார்.