விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது
திருப்பூர் பொம்மநாயக்கன் பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையம் பவானி நகர் பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவின் பெயரில் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் மேற்பார்வையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர். பொம்ம நாயக்கன்பாளையம் பவானி நகர் குடியிருப்பு பகுதியில் அபினேஷ் குமார் ( 23 ) , ரோஷன் குமார் ( 20 ) , விர்ஜி குமார் ( 25 ) , சன்னி ( 19 ) மற்றும் 17 வயதுடைய சிறுவன் தங்கி வந்துள்ளனர்.
இவர்களது அறையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அளவு எடை காணப்பட்டது.
இதில் 18.500 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் வீட்டிலிருந்து 4 கைப்பேசி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அபினேஷ் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது , இவர் பீகாரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் (22) மற்றும் ராகுல் குமார் (22) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களிடமிருந்து 1.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.