நீர்வரத்து கால்வாயில் உணவு கழிவுகள்: அழிவின் விளிம்பில் வைப்பூர் ஏரி
வைப்பூர் ஏரியில் நீர்வரத்து கால்வாயில் உணவு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.;
கழிவுகளால் நிரம்பியுள்ள ஏரி
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றித்திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது.15 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியினரின் முக்கிய குடிநீர் மற்றும்விவசாய பாசன நீர் ஆதாரமாக விளங்கியது.
இந்த நிலையில், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வருகைக்குப் பின், இங்கு விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்டது. ஏரியும் பராமரிப்பு இன்றி போனது. விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்தாவிட்டாலும், இந்த ஏரியின் நீர் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. தவிர, மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் தாகத்தை தீர்க்க ஏரி நீரை குடித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த ஏரியின் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவுகளை ஏரியில் கலக்க விடுகின்றனர். மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உணவு கழிவுகளை இரவு நேரங்களில்,
வாகனங்களில் கொண்டுவந்து இந்த ஏரியின் நீர்வரத்து கால்வாயில் கொட்டி செல்கின்றனர். இவை மழை பொழிவின் போது, அப்படியே ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரிநீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுநீர் கலப்பதால் ஏரியில் உள்ள செடிகள்கருகி வருகின்றன. ஏரியின் நீரை அருந்தும் கால்நடைகள் நோய்வாய்பட்டு வருகின்றன.
இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் எழுந்துள்ளது. இது குறித்து பல முறை மாசு கட்டுபாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த மறுக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, ஏரியில் கழிவுகள் விடுவதை தடுத்து, நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.