மூன்றாவது நாளாக ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது. டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது.
இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதற்கிடையே பாதிப்பு காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நேற்றும் இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. இந்த நிலையில், மீட்புப் பணிக்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மூன்றாவது நாளாக இன்று மதுரை விமான நிலையத்திலிருந்துஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களில் 394.20 டன்(3,94,200 கிலோ) அளவில் நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மற்றும் சரக்கு வாகனம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களுக்கு மூன்றாவது நாளான இன்று (21.12.23) காலை 7:30 மணிக்கு மத்திய தொழிலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை, வருவாய்த்துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டரில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை முதன்மைச் செயலர் அமுதா ஐ.ஏ.எஸ்., சென்னையில் இருந்து ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்.
மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா தலைமையில் திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கடலூா், திருப்பூா் மாவட்ட நிா்வாகங்கள் அனுப்பிவைத்த குடிநீா் புட்டிகள், ரொட்டி, பால் பவுடா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டு, பொட்டலமிடப்பட்டு அனுப்பப்பட்டுவருகிறது. வருவாய்த் துறை, மாநகராட்சி, ஊரக வளா்ச்சி ஊராட்சித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் பணியாளா்கள் 300 போ சுழற்சி முறையில் இந்தப் பணிகளை மேற்கொண்டனா்.
கடந்த 18ஆம் தேதி முதல் நேற்று 20 ஆம் வரை மூன்று நாட்களில் 394.20 டன்(3,94,200 கிலோ) அளவில் நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மற்றும் சரக்கு வாகனம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 1,69,838 பிஸ்கட் பாக்கெட்டுகள், 28,804 பிரட் பாக்கெட்டுகள், 1,03,503 குடிநீர் பாட்டில்கள் (ஒரு லிட்டர் பாட்டில் 65,598, 500 மி.லி பாட்டில் 19,731, 300 மிலி பாட்டில் 18,174), 73 கிலோ பால் பவுடர், 22,101 ரஸ்க் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கும். இதுதவிர அரிசி, கோதுமை மாவு, பெட்ஷீட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்திகள், நாப்கின்கள், கொசு வலைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.