வனத்துறையினர் உறுதி: போராட்டத்தை கைவிட்ட மக்கள்
நீலகிரி அருகே மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்துள்ள நிலையில் 8 மணி நேரமாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கொலப்பள்ளி பகுதியில் சிறுமியை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம பகுதி மக்கள் இன்று காலை 8 மணி முதல் 3 மணி வரை 8 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படுமென வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதன் காரணமாக எட்டு மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
ஏற்கனவே சிறுத்தையை பிடிக்க 5;கூண்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதுமலையிலிருந்து மேலும் இரண்டு கூண்டுகள் கொண்டுவரப்பட்டு மொத்தம் ஏழு கூண்டுகள் வைக்கப்பட உள்ளன. முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகிய இருவரும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிறுத்தை பிடிப்பதற்கான ஆயத்த பணியில் ஈடுபட உள்ளனர். மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட உள்ளதால் கொலப்பள்ளி, ஏலமன்னா,மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.