தகுதி தேர்விற்கான 3500 புத்தகங்களுடன் இலவச இன்டர்நெட் வசதி சேவை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்குமான புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட் சேவை மயிலாடுதுறை நகராட்சி இலவசமாக வழங்கியது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 6244 காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 5659 காலி பணியிடங்கள் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியிலும், 412 காலிப்பணியிடங்கள் 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியிலும், 173 காலிப்பணியிடங்கள் பட்டப்படிப்பு கல்வி தகுதியிலும் நிரப்பப்பட உள்ளது.
இந்த விளம்பர அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள இளைஞர்கள் இணையவழியாக (https://www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க 28.02.2024 கடைசி நாளாகும். மேலும் எழுத்துத் தேர்வானது 09.06.2024 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய நடத்தும் அனைத்து தகுதி தேர்வுகளுக்கும் உதவக்கூடிய மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட அறிவுசார் நூல் நிலையம் மயிலாடுதுறையில் திறக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரிக்கு நேர் எதிராக மயிலாடுதுறை நகராட்சி சார்பில் இந்த பொது நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விசாலமான அறைகள் வசதியான இருக்கைகள் பத்துக்கும் மேற்பட்ட கணினிகள் கட்டணமில்லா இன்டர்நெட் வசதியுடன் தேர்வாளர்கள் உபயோக்க்கவும் படிப்பதற்கும் தேவையான விலை உயர்வான 3500 புத்தகங்கள் உள்ளது.
காலை 10 மணிக்கு திறக்கும் இந்த மையம் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் போட்டித் தேர்வர்கள் எந்தவித இடைஞ்சலமின்றி அமைதியாக படிப்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது. இதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு செல்லும் அனைவரும் ஒருமுறை இந்த மையத்தை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து படித்து பயன்பெற மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
(மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது)