குடிநீர் கேனில் தவளை - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில், பொதுமக்கள் வாங்கிய வாட்டர் கேனில் உயிருடன் தவளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் நேரில் கடைக்கு சென்று சோதனை செய்தார் வாட்டர் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி ,காலாவதியான தேதி குறிப்பிடாமல், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. காலாவதியான தேதி குறிப்பிடாமல் உள்ள வாட்டர் கேனோ மற்றும் பாக்கெட் பொருட்களை வாங்கி விற்பனை செய்யகூடாது என்று மளிகைக்கடைகாரரை எச்சரித்தனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் உள்ள வாட்டர் கேன் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த வாட்டர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது. அவற்றை தடுத்து நிறுத்தினார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தவளை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தண்ணீர் நிரப்பப்படாத வாட்டர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தவளை உள்ளே நுழைந்து இருக்கும் என்று கூறிய அலுவலர் கட்டிடத்தை ஆய்வு செய்தபோது காலி கேன்கள் உள்ள இடத்தில் தவளைகள், நத்தை, மரவட்டை இருந்தது தெரியவந்தது. உடனடியாக நிறுவனத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள புஷ்பராஜ் உத்தரவிட்டார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் தவளை உயிருடன் இருந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது