திருச்சியில் கேலோ இந்தியா - மல்லா் கம்பம் போட்டிகள்
திருச்சியில் நடைபெறும் கேலோ- இந்தியா மல்லர் கம்பம் போட்டிகளில் 23 அணிகளை சேர்ந்த 217 பேர் பங்கேற்றுள்ளனர்.;
மல்லர் கம்பம்
ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் மல்லா் கம்பம் போட்டிகள் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கிய போட்டிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி ஆகியோா் பாா்வையிட்டனா். மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளா் பி. வேல்முருகன், கேலோ இந்தியா விளையாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 18 வயதுக்குட்பட்ட தலா 6 வீரா், வீராங்கனைகளைக் கொண்ட 110 ஆண்கள், 107 மகளிா் என 217 போ் 23 அணிகளாக கலந்து கொண்டனா்.
வரும் 24 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் போட்டிகள் நிலை மல்லா் கம்பம், தொங்கும் மல்லா் கம்பம், கயிறு மல்லா் கம்பம் ஆகிய மூன்று விதங்களில் அணிகள், தனிநபா், ஒட்டுமொத்த செயல்பாடு என 3 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முறையே 16 திறன்கள், 14 திறன்கள், 18 திறன்களை 90 நிமிஷங்களில் வெளிப்படுத்த வேண்டும். செயல்திறன் வெளிப்படுத்துதலுக்கு 10 புள்ளிகள் கணக்கிடப்பட்டு, வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுவா். ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் பிரிவுக்கான முதல் சுற்று அணிகள் பிரிவுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை மாலை முதல் மகளிருக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்துப் போட்டிகளும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. வீரா்களின் புள்ளிகள் கணக்கிடப்பட்டு உடனுக்குடன் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள திரைகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. மாநகர காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், மருத்துவத் துறை சாா்பில் முதலுதவி சிகிச்சை ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.