விநாயகர் சிலை; விதிகளை மீறினால் நடவடிக்கை!
வேலூர் மாவட்டத்தில் விதிமிதி விநாயகர் சிலை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் வைப்பது மற்றும் அவற்றை கரைப்பது தொடர்பாக விழாக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜ்குமார், வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பேசுகையில்," விநாயகர் சதுர்த்தி விழா வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்தாண்டும் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும். பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அருகே உள்ள ஏரிகளில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் செய்யும் இடங்களில் அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து சிலையின் உயரம் மற்றும் சிலை செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவற்றின் மீது வேதியியல் பொருட்கள் கலந்து வர்ணம் பூசக்கூடாது. சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாரிஸ் சாந்து (பிளாஸ்டர் ஆப் பாரிஸ்) கொண்டு சிலைகள் செய்யக்கூடாது. எளிதில் நீரில் கரையக்கூடிய வகையிலான களிமண் கொண்டு மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும். மாசு கட்டுப்பாட்டுதுறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் இணைந்து சிலை செய்யும் இடங்களை ஆய்வு செய்து சிலைகள் உரிய விதிமுறைகளின்படி வேதிப்பொருட்கள் கலக்காமல் செய்யப்படுகிறதா? என்று உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி சிலை செய்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என பேசினார்.